அதிமுகவிலிருந்து விலகல்... எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா ஏற்பு !
அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீண்ட நாட்களாகக் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த அதிருப்தி காரணமாக அவர் இன்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்துத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
அவர் நேரில் அளித்த இந்த ராஜினாமா கடிதத்தை உடனடியாகப் பரிசீலித்த சபாநாயகர், அதனை முறைப்படி ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் கரூர் சட்டமன்றத் தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதுடன், அந்தப் பகுதியில் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்னும் சில தினங்களில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது. இந்தத் திடீர் அரசியல் நகர்வு காரணமாகத் தமிழக அரசியல் களம் தற்பொழுது புதிய திருப்பத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
