இன்று தென் சென்னையில் விஜய் பிரச்சாரம்.. சைதாப்பேட்டையில் ரோடு ஷோ... நந்தனத்தில் தொண்டர்களிடையே உரை!
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ஏப்ரல் 21ம் தேதி மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது.

இந்த இறுதி கட்ட பரப்புரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தென் சென்னை பகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் முக்கிய வீதிகளின் வழியாக வாகனத்தில் சென்றபடி மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த ரோடு ஷோ நிகழ்வின் போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் நந்தனம் பகுதியில் நடைபெறும் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரை ஆற்ற உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அவரது இந்தப் பரப்புரை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை முடிவுக்கு வருவதால் தென் சென்னை பகுதியில் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
