பீர் பாட்டிலில் விஜய் படம்... தவெக வேட்பாளருக்கு எதிராகச் சதி? - போலீசில் புகார்!
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் மர்ம நபர்கள் செய்துள்ள காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சபரி ஐங்கரன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் பீர் பாட்டில்கள் சிலவற்றின் மீது, கட்சித் தலைவர் விஜய் மற்றும் வேட்பாளர் சபரி ஐங்கரனின் புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் கட்சியின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பீர் பாட்டில்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி எனத் தெரிவித்துள்ளனர். கட்சியின் நற்பெயரைக் கெடுக்கவும், வாக்காளர்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்கவும் எதிர்க்கட்சியினர் அல்லது மர்ம நபர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து தவெக நிர்வாகிகள் தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். "எங்கள் தலைவரின் புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி வதந்தியைப் பரப்பியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், இதுபோன்ற 'சிறுபிள்ளைத்தனமான' வேலைகளைச் செய்வதாகத் தவெக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
