திமுகவிலிருந்து விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் விலகல் - கலப்பை’ மூலம் மீண்டும் மக்கள் பணி!

 
பி.டி.செல்வகுமார் பி.டி.செல்வகுமார்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகியுமான பி.டி.செல்வகுமார், திமுகவிலிருந்து விலகி மீண்டும் தனது சுயேச்சை மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளார்.

திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார், சமீபகாலமாகத் தமிழக அரசியலில் நிலவும் சூழல்கள் மற்றும் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மக்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காலம் எனக்கு அதிகாரம் அளிப்பதைத் தள்ளிப்போடுகிறது. இருப்பினும், மக்களுக்காகப் பணியாற்றப் பதவி மட்டுமே தடையாக இருக்கக் கூடாது என நினைக்கிறேன்."

விஜய் செல்வகுமார்

"கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நான் மீண்டும் முழுநேரமாக மக்கள் பணியில் இறங்கவுள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுகவில் இணைவதற்கு முன்பு, பி.டி.செல்வகுமார் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது மீண்டும் அதே இயக்கத்தின் மூலம் தனது அரசியல் மற்றும் சமூகப் பயணத்தைத் தொடரப் போவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

செல்வகுமார்

நடிகர் விஜய்யின் மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்தவர் என்பதால், அவர் தனது முன்னாள் பாஸ் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா அல்லது கலப்பை இயக்கம் மூலம் தனித்துச் செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவரின் இந்த விலகல் குமரி மாவட்ட திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.