விஜய்யின் நண்பர் நடிகர்' ஸ்ரீநாத் அமைச்சராகிறார்.. இன்று காலை பதவியேற்றார்!
இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், தமிழ் சினிமா நடிகருமான தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் புதிய அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்பட்ட திமுக-வின் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனை எதிர்த்துப் போட்டியிட்டு, அவரை அதிரடியாகத் தோற்கடித்து ஸ்ரீநாத் சாதனை படைத்தார். தூத்துக்குடி தொகுதியைக் கைப்பற்றியதுடன், திமுகவின் முக்கியப் புள்ளியை வீழ்த்தியதால் ஸ்ரீநாத் அப்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த ஸ்ரீநாத், முதலமைச்சர் விஜய்யின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நண்பர் ஆவார். சினிமாவில் இருந்து அரசியல் களம் வரை விஜய்யின் பயணத்தில் முக்கியத் தூணாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்திற்கான 23 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் ஸ்ரீநாத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி மற்றும் முதலமைச்சருடனான நட்பு ஆகியவற்றின் அடிப்படையில் இவருக்கு இந்த அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராகப் பதவியேற்க உள்ள ஸ்ரீநாத்துக்கு எந்தவொரு முக்கியத் துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்த எதிர்பார்ப்பு தவெக தொண்டர்கள் மற்றும் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
