சட்டமன்றத்தில் விஜய் ‘மாஸ்’ வெற்றி! 22 பேர் எதிர்ப்பு; 5 பேர் நடுநிலை!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் வெளிநடப்புகளுக்கு இடையே, தவெக அரசுக்குத் தேவையான பெரும்பான்மையை விடக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
அரசுக்கு ஆதரவாகப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர். தவெக: 106 உறுப்பினர்கள், அதிமுக (வேலுமணி தரப்பு): 24 உறுப்பினர்கள் (அதிமுக-வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து இந்தத் தரப்பு தவெக-விற்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது). காங்கிரஸ்: 5 உறுப்பினர்கள். இடதுசாரிகள்: 4 உறுப்பினர்கள். விசிக: 2 உறுப்பினர்கள். ஐயூஎம்எல் : 2 உறுப்பினர்கள். சுயேட்சை: 1 உறுப்பினர்.

அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு உறுப்பினர்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் யாருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகித்தனர். பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் சில கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 55 உறுப்பினர்கள், வாக்கெடுப்பைப் புறக்கணித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆட்சி அமைக்கவும், அதனைத் தக்கவைக்கவும் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் மூலம் எவ்விதச் சிக்கலும் இன்றி தவெக அரசு தனது பலத்தை நிரூபித்துள்ளது. வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து தவெக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சபாநாயகர் வாக்கெடுப்பு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் சபைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
