பிரதமர் மோடியுடன் விஜய் சந்திப்பு நிறைவு... பத்தே நிமிடங்களில் முடிந்த அதிகாரப்பூர்வ சந்திப்பு!

 
மோடிவிஜய் மோடிவிஜய்

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக இன்று  டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான சி.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள 'சேவா தீர்த்' வளாகத்தில் நடைபெற்ற இந்த உயர் மட்டச் சந்திப்பு, தமிழக அரசியல் மற்றும் மத்திய - மாநில அரசு உறவுகளில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் இந்த டெல்லி பயணத்தில் உடன் சென்றுள்ளனர். பிரதமருடனான சந்திப்பின் போது, தமிழகத்தின் நீண்டகாலத் தேவைகள் மற்றும் முக்கியத் திட்டங்கள் குறித்த விரிவான கோரிக்கைக் கடிதத்தை முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார்:

சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் மற்றும் தமிழகத்தின் நடப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதிப் பங்கீட்டை விரைந்து ஒதுக்கீடு செய்தல். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முற்படும் திட்டத்தின் விரிவான அறிக்கை குறித்து, மத்திய ஜலசக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் அழுத்தமான கோரிக்கை, தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு, பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்குதல், காரிஃப் பருவத்திற்கான தடையற்ற உர விநியோகம் மற்றும் 'பிஎம் ஸ்ரீ'  பள்ளித் திட்ட அமலாக்கம்.

சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் பலத்த பாதுகாப்புடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்குத் திரும்பினார். அங்கு அவருக்குத் தமிழக அரசு சார்பில் 'கார்டு ஆஃப் ஹானர்' (Guard of Honour) எனப்படும் போலீஸ் மரியாதையும் வழங்கப்பட்டது.

பிரதமரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, டெல்லியில் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான சந்திப்புகள் அடுத்தடுத்து தீவிரமடையவுள்ளன.  தமிழகத்தின் நிதி நிலவரங்கள் மற்றும் மத்திய அரசுத் திட்டங்கள் குறித்துப் பேசுவதற்காகத் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நாட்டின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை முதலமைச்சர் விஜய் இன்று மாலை நேரில் சந்திக்கவுள்ளார்.

நிர்வாக ரீதியிலான சந்திப்புகள் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தவெக அரசு அமையப் பின்நாட்களில் ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை '10, ஜன்பத்' இல்லத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.

மேலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள மாபெரும் திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் விஜய் இந்த டெல்லி பயணத்தின் போது திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மத்திய அரசு மற்றும் கூட்டணித் தலைவர்களுடன் இணக்கமான உறவை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ள இந்த டெல்லி விசிட், தேசிய அளவில் உற்றுநோக்கப்படுகிறது.