இன்று கன்னியாகுமரியில் விஜய் பொதுக்கூட்டம் ரத்து.. ரோடுஷோவில் இறங்கும் விஜய் - 6 மணிநேர கெடுபிடியுடன் போலீஸ் அனுமதி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் கன்னியாகுமரி மாவட்டப் பயணத்தில் கடைசி நேரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ரோடுஷோ நடத்தப்பட உள்ளது.
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனால், இன்று திடீரென அந்தப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 6 மணிநேரம் மட்டுமே (மதியம் 2 முதல் இரவு 8 வரை) தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதால், பொதுக்கூட்டத்தை விட ரோடுஷோ மூலம் அதிக மக்களைச் சென்றடைய முடியும் எனத் தவெக தலைமை முடிவு செய்துள்ளது.

இன்று மதியம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வரும் விஜய், அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தடைகிறார். கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் தொடங்கி, 'சீரோ பாயிண்ட்' வரை பைபாஸ் சாலையில் விஜய் ரோடுஷோ செல்கிறார்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல் மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 தொகுதி வேட்பாளர்களையும் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, 'விசில்' சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.

விஜய் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் குவிந்து வருவதால், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் தவிர்க்க தீவிரக் கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
ஒருபுறம் முதலமைச்சர் ஸ்டாலின் காலை, மாலை எனப் பொதுக்கூட்டங்களில் உரையாற்ற, மறுபுறம் எடப்பாடி பழனிசாமி வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சீமானும் தனது பாணியில் சுழன்று வரும் வேளையில், விஜய்யின் இந்த இன்றைய ரோடுஷோ தென் மாவட்டத் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
