விஜய் பதவியேற்பு விழா ரத்து... பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் - நேரு அரங்கில் பணிகள் நிறுத்தம்!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு இன்னும் சில இடங்கள் குறைவாக இருப்பதால், இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழாத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சியமைக்க மொத்தம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி தவெக: 108 இடங்கள், காங்கிரஸ் ஆதரவு: 5 இடங்கள். இன்னும் 5 முதல் 6 இடங்கள் வரை ஆதரவு தேவைப்படுகிறது. இந்த 6 இடங்களை உறுதி செய்வதற்காகச் சில சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களுடன் தவெக தலைமை தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இறுதிப்பட்டியல் இன்னும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படாததால், பதவியேற்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு இன்னும் வெளியாகவில்லை.

விஜய்

பதவியேற்பு விழாவுக்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த இரண்டு நாட்களாகப் பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை முதல் அந்தப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் அங்கிருந்து மெல்லத் திரும்பப் பெறப்பட்டு வருகின்றனர். இது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சிக்கலான சூழலில், இன்று காலை 10 மணி முதல் தவெக தலைவர் விஜய், வெற்றி பெற்ற தனது 108 எம்.எல்.ஏ-க்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். "ஆளுநர் விதித்துள்ள நிபந்தனைகளை எப்படிச் சமாளிப்பது?" மற்றும் "கூடுதல் ஆதரவைத் திரட்டுவது எப்படி?" என்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆளுநர் விஜய்

மறுபுறம், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ-க்கள் யாரும் தவெக பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளனர். இந்த இழுபறியால் தமிழக அரசியலில் அடுத்த சில மணிநேரங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.