விஜய்யின் திருச்சி, புதுக்கோட்டை ‘ரோடு ஷோ’ ரத்து... அடுத்தடுத்து மாற்றப்படும் பயணத் திட்டத்தால் தொண்டர்கள் ஏமாற்றம்!

 
விஜய் பிரச்சாரம் விஜய் பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தில் மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறவிருந்த 'ரோடு ஷோ' ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைமை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாளை தருமபுரி மாவட்டத் தொகுதிகளில் விஜய் தீவிரப் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாகவே திருச்சி மற்றும் புதுக்கோட்டை பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட இந்த மாவட்டங்களுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அங்கு இன்னும் பிரம்மாண்டமான முறையில் ரோடு ஷோ நடத்தப்படும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தவெக விஜய்

ஏற்கனவே கடந்த சில நாட்களில் சென்னை வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை, கடலூர் மாவட்டப் பிரச்சாரங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் விஜய்யை வரவேற்கப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தத் திடீர் ரத்து அறிவிப்பு அப்பகுதி தொண்டர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தருமபுரியில் நாளை அவர் மேற்கொள்ளும் பிரச்சாரம் மேற்கு மாவட்டங்களில் தவெக-வின் செல்வாக்கை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.