விக்ரம் வீடியோ விவகாரம்: 'லார் கிப்பான்' குரங்கின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
நடிகர் விக்ரம் அரிய வகை 'லார் கிப்பான்' (Lar Gibbon) குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிச் சர்ச்சையான நிலையில், அந்தப் பிராணியின் உரிமையாளரான ஈரோட்டைச் சேர்ந்த கேசவநாதன் என்பவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'லார் கிப்பான்' என்ற அரிய வகை வெளிநாட்டுப் பிராணியுடன் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணையில் இறங்கினர். விசாரணையில், அந்தப் பிராணி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.
மணிப்பூரிலிருந்து வாங்கப்பட்ட 3 லார் கிப்பான் குரங்குகளைத் தமிழ்நாடு வனத்துறையில் உரிய காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாமல் தாமதமாக ஆன்லைனில் பதிவு செய்தது. வளர்க்கப்பட்டு வந்த 3 குரங்குகளில் ஒரு குரங்கு இறந்துவிட்ட நிலையில், அதுகுறித்த தகவலை வனத்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்தது.
ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் ஆஜரான கேசவநாதனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வனத்துறை விதிகளின்படி அவருக்குச் சட்டம் சார்ந்த அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
