குடியிருப்புக்குள் புகுந்து தொழுவத்தில் கட்டியிருந்த ஆட்டை தூக்கிச் சென்ற சிறுத்தை !
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, வீட்டு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை கடித்துக் கொன்று தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவரான இவர், தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டு தொழுவத்துக்குள் சிறுத்தை புகுந்துள்ளது. அங்கு கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை கடித்துக் கொன்று தூக்கிச் சென்றது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த சுப்பிரமணியன் குடும்பத்தினர், சிறுத்தை ஆட்டைத் தாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால் அச்சமடைந்துள்ள மக்கள், அந்த விலங்கை விரைந்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
