விளாத்திகுளம் +2 மாணவி பலாத்காரக் கொலை வழக்கு... புகாரைப் பெற மறுத்த பெண் எஸ்.ஐ.க்கு கட்டாய பணி ஓய்வு!

 
விளாத்திகுளம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பிளஸ்-2 மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெற்றோர் அளித்த புகாரைப் பெற்று உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட பெண் இன்ஸ்பெக்டருக்குக் கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த மார்ச் 10, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி, அரசுப் பொதுத்தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினார். அன்றைய தினம் மாலையில் இயற்கை உபாதைக்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

விளாத்திகுளம் தர்ம முனீஸ்வரன்

மாணவி மாயமானது குறித்துக் குளத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளிக்கச் சென்றபோது, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அங்குச் சென்றால், மீண்டும் குளத்தூர் காவல் நிலையத்திற்கே செல்லுமாறு விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா மற்றும் போலீசார் அவர்களை அலைக்கழித்துள்ளனர்.

உரிய நேரத்தில் காவல்துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படாததால், அடுத்த நாள் மாலையில் மாணவி காட்டுப் பகுதியில் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களும் உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தர்ம முனீஸ்வரன் (37) என்பவரை காவல்துறையினர் மார்ச் 19 அன்று கைது செய்தனர். ஏற்கனவே மூதாட்டியைப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ஜாமீனில் வெளியில் வந்திருந்தபோது அவர் இக்கொலையைச் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

விளாத்திகுளம்

தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், கடந்த மே 25, 2026 அன்று தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் கடுமையான தீர்ப்பு வழங்கப்பட்டாலும், மாணவி மாயமானபோது பெற்றோர் அளித்த புகாரை ஏற்க மறுத்து அலட்சியப்படுத்திய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

சம்பவம் நடைபெற்ற காலக்கட்டத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் பிரவீனா, பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தன் கடமையில் அலட்சியம் காட்டிய இன்ஸ்பெக்டர் பிரவீனாவைச் சேவை மற்றும் ஒழுங்கீன அடிப்படையில் கட்டாய பணி ஓய்வு வழங்கி நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அளிக்கும் புகார்களைப் பெறாமல் காலம் தாழ்த்தும் காவல் அதிகாரிகளுக்கு இச்சம்பவம் கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.