சாலை வசதி இல்ல... முதியவரை தொட்டில் கட்டி சுமந்து சென்ற கிராம மக்கள்!
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் நடுவே இடமலக்குடி இருப்பதால் அங்குள்ள மக்கள் நீண்ட காலமாகவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். பருவமழைக் காலத்தில் ஏற்கெனவே கடினமாக உள்ள பாதைகள் பயன்படுத்த முடியாதவையாக மாறுவதுடன் ஒழுங்கான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் மருத்துவமனைக்கு செல்லவும் குறைந்தது ஐந்து கி.மீ. தூரம் தாண்டி மலைப்பாதை வழியாக செல்ல வேண்டியுள்ளது.
இடமலக்குடி பஞ்சாயத்தில் உள்ள கூடல்லார்குடியை சேர்ந்த மலையப்பன் என்பவர் கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்றைய தினம் அவரது உடல் நலம் மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து காப்பாற்ற முடிவு செய்தனர். மலையப்பனை சேலையில் சுற்றி தொட்டில்போல் அமைத்து அதனை மூங்கில் கம்பில் கட்டி முன்னும் பின்னும் தோளில் சுமந்து கடினமான காட்டுப்பகுதியில் தூக்கி சென்றனர்.
சாலை வசதி உள்ள அனைக்குளம் பகுதிக்கு அவரை கொண்டு சென்று பின்பு ஒரு ஆட்டோவில் ஏற்றி அடிமாலி தாலுகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து இடமலக்குடி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் அனைவரின் கவனத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே அந்த கிராமத்தில் உரிய சாலை வசதி இல்லாமல் ஒரு குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
