'நோட்டா'வுக்கு ஓட்டுப்போட்ட மொத்த கிராம மக்கள்... நீலகிரியில் அதிர்ச்சி!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அஜ்ஜூர் கிராம மக்கள், அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைக்காகத் தேர்தலைப் புறக்கணித்துவிட்டு, பின்னர் ஊரே திரண்டு வந்து 'நோட்டா'வுக்கு (NOTA) வாக்களித்த சம்பவம் தமிழக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜ்ஜூர் கிராமத்தை வனப் பகுதியாக அறிவித்து, அங்கிருந்து மக்களை வெளியேறச் சொல்லி வனத்துறையினர் தொடர்ச்சியாக நோட்டீஸ் அனுப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் பூர்வீக மண்ணை விட்டு வெளியேற மறுக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த 818 வாக்காளர்களும், இன்று காலை முதல் ஒருவர்கூட வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் தேர்தலை முழுமையாகப் புறக்கணித்தனர். இதனால் அஜ்ஜூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கிராம மக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இருப்பினும், அதிகாரிகளின் வாக்குறுதியில் நம்பிக்கையில்லை என்று தெரிவித்த கிராம மக்கள், "எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை" என்று கூறி சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வாக்குச் சாவடிக்கு வரத் தொடங்கினர். ஆனால், அவர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் ஒட்டுமொத்தமாக 'நோட்டா' பொத்தானை அழுத்தித் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு கிராமமே ஒன்றிணைந்து அதிகார வர்க்கத்திற்கு எதிராக 'நோட்டா'வை ஆயுதமாகப் ஏந்தியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
