வில்லிவாக்கத்தில் சாலையோரம் நின்றவர்கள் மீது பாய்ந்த டேங்கர் லாரி… ஒருவர் பலி; ஓட்டுநர் கைது!
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வில்லிவாக்கம் பகுதியில் இன்று (நவம்பர் 11) காலை டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் அன்பழகன் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 3 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த அன்பழகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுநர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். லாரி கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
