விழுப்புரத்தில் மாயமான 7 வயது சிறுமி! தேடுதல் வேட்டையில் 100 போலீசார்… கூடுதலாக 3 தனிப்படைகள் அமைப்பு

 
விழுப்புரம்

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கண்டுபிடிக்க ஏற்கெனவே 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம்

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாள் மாயம்

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி. கடந்த 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

விழுப்புரம்

டிரோன்கள், தடயவியல் நிபுணர்கள் மூலம் தீவிர தேடுதல்

சிறுமியைத் தேடும் பணியில் டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதுடன், விவசாய நிலங்கள், புதர்கள், கிணறுகள், குளங்கள் மற்றும் மலைப்பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்கள் சிறுமியின் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகள், செல்போன் அழைப்பு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பல நாட்களாகத் தேடுதல் நீடித்தும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காததால், விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் இருப்பிடம் குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.