விழுப்புரத்தில் கோழிப்பண்ணையில் தீ விபத்து... 4,200 கோழிக்குஞ்சுகள் பலி!
விழுப்புரம்: கிளியனூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,200 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன.விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் மெயின் ரோட்டில் சண்முகம் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இங்கு 4,200 கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தன. சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் பண்ணையிலிருந்து வீட்டுக்குச் சென்ற சண்முகத்துக்கு, நள்ளிரவு 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வானூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், பண்ணையில் இருந்த 4,200 கோழிக்குஞ்சுகளும் உயிரிழந்தன.இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
