புதுச்சேரியில் கள்ள ஓட்டு போட்ட விழுப்புரம் வாலிபர்.. பூத் ஏஜென்ட்கள் பிடியில் சிக்கிய நிலையில் கைது!
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9ம் தேதி புதுச்சேரி முழுவதும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இந்த விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வாக்குச்சாவடிக்கு வந்த ஒரு நபர், தனது பெயர் 'சீனிவாசன்' என்று கூறி ஓட்டு போட முயன்றார். தேர்தல் அதிகாரி அவரது பெயரைச் சத்தமாக அறிவித்தபோது, அங்கிருந்த அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.

பூத் ஏஜென்ட்கள் அந்த நபரின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தனர். அவர் வாக்கை எந்திரத்தில் பதிவு செய்துவிட்டு வெளியே வரும்போது, ஏஜென்ட்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
பிடிபட்ட நபர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் அல்ல; அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (31) என்பது தெரியவந்தது. 'சீனிவாசன்' என்ற வேறொரு நபரின் பெயரில் போலியாக வாக்களிக்க அவர் வந்துள்ளார். அரவிந்தை பிடித்த தேர்தல் அதிகாரிகள் உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் வாக்குமூலத்தில், "விழுப்புரத்தில் இருக்கும் எனது நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நான் திருக்கனூர் பகுதிக்கு வந்தேன். அங்குள்ள பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போடுவதற்காகவே இந்தத் திட்டத்தைத் தீட்டினோம்" என்றார். இது கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அரவிந்தை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி கள்ள ஓட்டு போடுவது கண்டறியப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
