சிதம்பரம் அருகே விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்.. நடுரோட்டில் கிராம மக்கள் சாலை மறியல்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விநாயகர் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்திற்குள் சிலையை கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை மறியலும் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கறிக்குப்பம் பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்ற போது, தோப்பு இருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் விநாயகர் சிலையைத் தங்களது ஊருக்குள் கொண்டு வரக் கூடாது எனக் கூறி வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மீது நடத்தப்பட்ட இந்தச் செயல் தீண்டாமைக் கொடுமையாகப் பார்க்கப்பட்டு அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பட்டியலின மக்கள், விநாயகர் சிலையை நடுரோட்டிலேயே வைத்துத் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
