“விண்ணதிர நமச்சிவாய கோஷம்... ” தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் தொடங்கியது... மாவட்டம் முழுவதும் இன்று விடுமுறை!
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் (பெரிய கோயில்), சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஏப்ரல் 27, திங்கட்கிழமை அதிகாலை கோலாகலமாகத் தொடங்கியது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இந்தத் தேரோட்டம் நடைபெறுகிறது. இன்று அதிகாலை 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி உற்சாகத்துடன் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில் தியாகராஜர் - கமலம்பாள் எழுந்தருளி, தஞ்சையின் நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர்.

பொதுமக்கள் இந்த விழாவில் பெருமளவில் கலந்து கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் மே 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே மாதம் ஒரு சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், தஞ்சை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காகத் தற்காலிகக் குடிநீர் பந்தல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தேரோட்டத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தஞ்சை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்ற முழக்கங்களுடன் தஞ்சை மாநகரமே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.
