முதல்வர் விஜய்யின் உத்தரவை மீறய தவெக... சர்ச்சையைக் கிளம்பிய ரீல்ஸ்!
தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய், கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பொது இடங்களில் செயல்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்துப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அண்மையில் பிறப்பித்திருந்தார். குறிப்பாக, "அரசுப் பள்ளிகளுக்குள் சென்று ஆய்வு என்ற பெயரில் வீடியோக்கள் எடுத்து, அதைச் சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்டு விளம்பரம் தேடக் கூடாது" என்று அவர் மிகக் கடுமையான தடையை விதித்திருந்தார்.
அரசின் மாண்பைக் காக்கவும், அரசுப் பள்ளி மாணவர்களின் தனியுரிமைக்குத் தங்கம் விளைவிக்காமல் இருக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ ஒருவரே இதனை மீறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ-வாக இருக்கும் கஜேந்திரன், தனது தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றிற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், அந்தப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவைச் சாப்பிட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதியாகச் செய்ய வேண்டிய கடமையாக இது பார்க்கப்பட்டாலும், இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் சினிமா பாணியில் பின்னணி இசையுடன் வீடியோவாகப் பதிவு செய்து, அவரது சமூக வலைதளப் பக்கங்களில் 'ரீல்ஸ்' வீடியோவாக வெளியிட்டதே தற்பொழுது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. முதல்வர் பிறப்பித்த உத்தரவை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே காற்றில் பறக்கவிட்டுச் செயல்பட்டிருப்பது தவெக தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் அமைச்சரவையிலும், கட்சி நிர்வாகத்திலும் அதிரடி மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ள தற்போதையச் சூழலில், பென்னாகரம் எம்.எல்.ஏ-வின் இந்த விதிமீறல் நடவடிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், அவர் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
