ரயில் நிலையத்தில் கொடூரம்... தாயின் சடலத்துக்கருகே அழுது கொண்டிருந்த குழந்தைகள்... குழந்தைகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!
பீகார் மாநிலத்தில் உள்ள மாதேபுரா ரயில் நிலையத்தில், உயிரிழந்த தாயின் உடலுக்கு அருகில் அவரது இரண்டு பச்சிளம் குழந்தைகள் அழுது கொண்டிருந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதேபுரா ரயில் நிலையத்தில் நேற்று காலை ஒரு பெண்ணின் உடல் இருக்கை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் இரண்டு குழந்தைகள், தங்களது தாயார் இறந்தது கூடத் தெரியாமல் அவரது உடலின் இருபுறமும் அமர்ந்து அழுது கொண்டிருந்த காட்சி காண்போரை நிலைகுலைய வைத்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு குழந்தை அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்தது.
Children Found Crying Next To Mother's Body At Bihar Railway Station https://t.co/SpGuBtss5a pic.twitter.com/T6dUOUn2bD
— NDTV (@ndtv) February 24, 2026
"தந்தை வீட்டில் வைத்து அம்மாவைக் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் ஒரு ஆட்டோவில் ஏற்றி வந்து ரயில் நிலையத்தில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்" என்று அந்தச் சிறுவன் மழலை மாறாமல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த காஜல் குமாரி என்பதும், அவரது கணவர் பெயர் முகமது முர்ஷித் என்பதும் தெரிய வந்துள்ளது.
காஜல் குமாரி தற்போது கர்ப்பமாக இருந்ததாகவும், அவருக்கும் அவர் கணவருக்கும் இடையே சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் சங்கிலித் துண்டுகள் இருப்பதை போலீசார் கவனித்துள்ளனர். இது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ரயில்வே போலீசார் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது திட்டமிட்ட கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்தச் செயல் பீகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
