பெங்களூருவில் கொடூரம்.. 11 மாத குழந்தையை அடித்துக் கொன்று நாடகமாடிய பெற்றோர்!

 
தம்பதி கொலை குழந்தையைக் கொன்ற பெற்றோர்

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக 11 மாதக் குழந்தையைப் பெற்றோரே அடித்துக் கொலை செய்துவிட்டு, அது தற்செயலாக நடந்த விபத்து என நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர் ஷெக்கப்பா மற்றும் விஜயலட்சுமி. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு கடுமையான சண்டையின் போது, தங்களது 11 மாதக் குழந்தையை இவர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கொலையை மறைப்பதற்காக, குழந்தை படுக்கையிலிருந்து எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்துதான் இறந்துவிட்டது என்று கூறிப் பெற்றோர் இருவரும் சேர்ந்து நாடகமாடியுள்ளனர்.

குழந்தை உயிரிழப்பு

குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதன் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. மருத்துவப் பரிசோதனையின் முடிவில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. குழந்தை படுக்கையிலிருந்து விழுந்து இறக்கவில்லை என்பதும், அதன் உடலில் கடுமையான உள் காயங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

மருத்துவ அறிக்கையின் மூலம் பெற்றோர் பொய் சொல்வது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தந்தை ஷெக்கப்பா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகிய இருவர் மீதும் போலீசார் தற்போது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.