டெல்லியில் மீண்டும் கொடூரம்... அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண், 2 சிறுவர்கள் பலி; 30 பேர் படுகாயம்!
தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் சீமாபுரி பகுதியில் அமைந்துள்ள பலத்த சேதமடைந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்த உடனே அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளுக்குள் பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் எனப் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண், 2 சிறுவர்கள் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராட்சத இயந்திரங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
தலைநகரில் இதுபோன்ற கட்டிட விபத்துகள் தொடர்கதையாகி வருவது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில், ஒரு மாதத்திற்குள்ளாகவே மீண்டும் சீமாபுரியில் மற்றொரு கட்டிடம் இடிந்துள்ளது அதிகாரிகளின் பாதுகாப்புப் பணிகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
