தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறை... செல்போன் தகராறில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!
திருப்பூரில் பழைய செல்போன் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில், தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஏ.பி.டி. ரோடு இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் வெள்ளியங்கிரி என்பவரின் மகன் ஸ்ரீஹரி (19), அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தாய் இல்லாத ஸ்ரீஹரி, தனது பாட்டி பழனியம்மாளின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

நேற்று மதியம் ஸ்ரீஹரியின் வீட்டிற்கு வந்த 16 வயது சிறுவன் ஒருவன், அவரைத் தனியாகப் பேச வேண்டும் என்று வெளியே அழைத்துச் சென்றுள்ளான். சிறிது நேரத்தில் வீட்டின் அருகே ஸ்ரீஹரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, அவர் தலை, கழுத்து, கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்னம்பாளையத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவனான அந்தச் சிறுவன், ஸ்ரீஹரியிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பு செல்போன் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளான். அந்தச் செல்போன் சரிவர வேலை செய்யவில்லை எனக் கூறி பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது ஸ்ரீஹரி மறுத்துள்ளதால் ஆத்திரமடைந்த சிறுவன் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்துக் காவல்துறையினர் அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
