உஷார்... வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்... விரைவில் மருத்துவ முகாம்கள்!

 
மருத்துவ முகாம்
 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சளி, இருமல், தலைவலி, தொண்டை வலி, அதிக காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை அதிகரித்த நிலையில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸே இதற்குக் காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடிய நோயாகும் என்பதையும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டியது அவசியம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழை தொடங்கிய பிறகு ஒருசிலருக்கே காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக அந்தப்பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேர பணிப்புரையில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

முன்பு சிறிய மழையிலும் மருத்துவமனைகளுக்குள் நீர் புகும் நிலை இருந்ததை நினைவுகூர்ந்து, கடந்த ஆண்டுகளில் அந்த பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கட்டமைப்புகளிலும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.