வைரல் வீடியோ... விருப்பம் இல்லைனா சத்தமாக 'நோ' சொல்லு... ஜெய்ஸ்வால் கில் உரையாடல்!

 
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி


இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக கூறினார்.  இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் களமிறக்கப்பட்டனர்.  இருவரும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வலு சேர்த்தனர். இதில்  ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய புதுமுக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. 


இதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், இளம் கேப்டன் சுப்மன் கில் கைகோர்த்தார். இருவரும் வேகமாக ரன் திரட்டுவதில் கவனமாக விளையாடத் தொடங்கினர்.  இங்கிலாந்து பவுலர்களுக்கு கடும் குடைச்சல் கொடுத்த ஜெய்ஸ்வால் 144 பந்துகளில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்து அமர்க்களப்படுத்தினார். 
சதம் அடித்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் (101 ரன், 159 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜெய்ஸ்வால்- கில் இணை 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது கவனிக்கத்தக்கது.  யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இந்த ஆட்டத்தில் கில் - ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி கொண்டிருந்த நிலையில்  ஜெய்ஸ்வால் பந்தை அடித்து விட்டு வேகமாக ரன் எடுக்க ஓடினார். ஆனால் மறுமுனையில் இருந்த கில் வேண்டாம் என்றார். இதனால் சில அடி தூரம் ஓடி வந்த ஜெய்ஸ்வால் மீண்டும் கிரீசுக்கு சென்றார்.  இதனையடுத்து ஜெய்ஸ்வால், கில்லை நோக்கி "உனக்கு ஓட விருப்பம் இல்லைனா சத்தமாக 'நோ' சொல்லு. எனக்கு பந்து அடிச்சதும் ஓடுற பழக்கம் இருக்கு" என கூறினார்.  போட்டியின்போது கில் - ஜெய்ஸ்வால் இடையே நடந்த இந்த உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.