வைரல் வீடியோ... இசக்கி சுப்பையாவை ‘ஓடு ஓடு’ என விரட்டியடித்த பொதுமக்கள்... தவெக வட்டாரத்தில் பரபரப்பு!
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், தவெகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அப்பகுதிக்குச் சென்ற தவெக பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா அவர்களிடம் சமாதானம் பேச முயன்றார்.
ஆனால், அப்பகுதி மக்கள் திடீரென அவருக்கு எதிராகக் குரல் எழுப்பி, "ஓடு ஓடு" எனக் கூறி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையாவுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இப்பகுதி மக்களிடையே அவருக்கு எதிராகக் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
