பாஜக எம்.எல்.ஏவின் காரைக் கழுவ தீயணைப்பு வாகனம் பயன்பாடு - வைரலான வீடியோவால் சர்ச்சை!
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ராலியில் உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம்நிவாஸ் ஷாவின் சொகுசு காரை கழுவுவதற்காக அரசுத் தீயணைப்பு வாகனம் பயன்படுத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்க்ராலியிலுள்ள பிலோஞ்சி பகுதியில் அமைந்த எம்.எல்.ஏவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரின் மீது, நகராட்சி ஊழியர்கள் மூவர் தீயணைப்பு வாகனத்தின் அதிவேகக் குழாயைப் பயன்படுத்தித் தண்ணீர் அடித்துக் கழுவும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
"மக்களின் அவசரத் தேவைக்கும் தீ விபத்துகளுக்கும் பயன்பட வேண்டிய அவசரகால சேவை வாகனங்களை பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது சொந்த வி.ஐ.பி பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது" என மாநில எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் மற்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
காரைக் கழுவும் போது தான் வீட்டில் இல்லை என்றும், எம்.எல்.ஏ அல்லது எம்.பி-க்கள் யாரும் தாங்களாகவே காரைக் கழுவுவதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அருகிலுள்ள மேயர் வீட்டிற்குத் தண்ணீர் நிரப்ப வந்த தீயணைப்பு வாகனம் தற்செயலாகத் தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டதாகவும், அதைக் கண்ட தனது கார் ஓட்டுநர் லேசாகத் தண்ணீர் அடித்து காரைக் கழுவியதாகவும், அவ்வாறு செய்யக்கூடாது என ஓட்டுநரைக் கண்டித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசர காலப் பயன்பாட்டிற்கான அரசு இயந்திரங்களைத் தனிப்பட்ட வேலைக்காகத் தவறாகப் பயன்படுத்தியது குறித்து நகராட்சி அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
