82 வயது மூதாட்டியிடம் 11 சவரன் தண்டட்டி பறிப்பு! காதை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள்
விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த 82 வயது மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன்கோட்டையைச் சேர்ந்த முத்துக்கருப்பாயி என்பவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த தங்கத் தண்டட்டியைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் காதை அறுத்து, சுமார் 11 சவரன் எடையுள்ள தங்கத் தண்டட்டியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த முத்துக்கருப்பாயி மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் யார், அவர்கள் எப்படித் தப்பிச் சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
