காதல் விவகாரத்தில் இளைஞர் கழுத்தறுத்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிரபாகரன், காதல் விவகாரம் காரணமாகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவர், எம்.புதுப்பட்டிக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில், அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் பிரபாகரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொடூரக் கொலை குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைப் பிரபாகரன் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்ததாகவும், இதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பிரபாகரனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் செவளூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து போலீசார் தற்போது ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட பிரபாகரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் ஒரு இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
