மகளைக் காதலித்த ஆத்திரம்... அடுத்தடுத்து 2 இளைஞர்களைத் தீர்த்துக்கட்டிய தந்தை!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவலூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், கொத்தனேரி கண்மாய் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், செவலூரைச் சேர்ந்த கில்லாடி சுரேஷ் மற்றும் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேரைக் கைது செய்தனர். விசாரணையில், கில்லாடி சுரேஷின் 17 வயது மகளைப் பிரபாகரன் காதலித்ததால், அவரை மது அருந்த அழைத்துச் சென்று சுரேஷ் கொலை செய்தது அம்பலமானது.
விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவலாக, கடந்த செப்டம்பர் மாதம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் என்பவரையும் சுரேஷ் கொலை செய்தது தெரியவந்தது. தனது மகளைத் தமிழரசன் காதலித்த காரணத்திற்காகவே, தனது மகனுடன் சேர்ந்து சுரேஷ் இந்தச் செயலைச் செய்துள்ளார். சிறையில் இருந்தபோது ஏற்பட்ட பழக்கத்தால், தற்போது பிரபாகரன் கொலையில் விக்னேஷ் என்பவரை அவர் கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டது போலீசாருக்குத் தெரியவந்துள்ளது.
மகளைக் காதலித்த காரணத்திற்காக ஒரே நபர் 2 வாலிபர்களை அடுத்தடுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான சுரேஷ் மற்றும் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கக் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
