விருதுநகரில் 144 தடை உத்தரவு, போலீஸ் குவிப்பு... காதல் விவகாரத்தில் கோஷ்டி மோதல்...கல்லூரி மாணவர் படுகாயம்!
விருதுநகர் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் கல்லூரி மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் அனஞ்சன். இவரது நண்பரான ராம்குமார் (18), மதுரை மாவட்டம் கொக்கலாஞ்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ராம்குமாரின் மற்றொரு நண்பரான மகாராஜன் (25) என்பவர், அக்காதலியின் தாயார் குறித்துத் தவறாகப் பேசி, அது தொடர்பான வீடியோவை அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளார். இதனால் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் மற்றும் அனஞ்சன் உட்படச் சிலர் கொக்கலாஞ்சேரிக்குச் சென்று மகாராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது இருதரப்பு கோஷ்டி மோதலாக மாறியதில், அனஞ்சனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அனஞ்சன், முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் இரு கிராமங்களுக்கு இடையே மேலும் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் சத்திரரெட்டியபட்டியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் கூடுதல் எஸ்.பி. கருப்பையா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டு, ஊருக்குள் வரும் வாகனங்களைத் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
