கடலில் கப்பலில் உயிர்கொல்லி வைரஸ்... 3 பயணிகள் பலி !
டச்சு நாட்டு சொகுசு கப்பல் ஒன்றில் 'ஹண்டா' எனப்படும் அரிய வகை வைரஸ் பரவியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கேப் வெர்தே கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலில், 147 பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இவர்களில் சிலருக்குத் திடீரென ஏற்பட்ட வைரஸ் பாதிப்பால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவல் வெளியானதை அடுத்து கப்பலில் உள்ள மீதமுள்ள 144 பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்த வைரஸ் மற்றவர்களுக்கும் மிக வேகமாகப் பரவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் ஏற்கனவே 7 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கப்பல் முழுவதும் சுகாதார அதிகாரிகளின் தீவிரக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தென் அமெரிக்கப் பகுதிகளில் இந்தக் கப்பல் பயணித்தபோது, பயணிகள் அதில் ஏறுவதற்கு முன்னரே இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தச் சர்வதேச சுகாதார விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடல்சார் போக்குவரத்துத் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
