இந்தியர்களுக்கு ஜாக்பாட்... அமெரிக்க எச்-1பி விசா 75% வாய்ப்பு - ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மாறும் வேலைவாய்ப்புச் சூழல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு எச்-1பி (H-1B) விசாவுக்கான லாட்டரி தேர்வு விகிதம் 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த காலங்களில் இருந்த 33 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் நிர்வாகத்தின் "அமெரிக்கா முதலில்" கொள்கையினால் எச்-1பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன: விசா கட்டணம் சுமார் ₹90 லட்சமாக உயர்த்தப்பட்டது இந்தியப் பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உயர் ஊதியம் பெறும் தகுதியானவர்களுக்கு லாட்டரி முறையில் 4 வாய்ப்புகள் வழங்கும் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டது. விசாவுக்கான நிதிச் சுமை அதிகரித்ததால், பல அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஸ்பான்சர் செய்வதைக் குறைத்துக் கொண்டன.

இதன் விளைவாக, ஆண்டுதோறும் சராசரியாகக் குவியும் 7 லட்சம் விண்ணப்பங்கள், இந்த ஆண்டு வெறும் 2.35 லட்சமாக சரிந்துள்ளது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்ததால், லாட்டரியில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு 33%-லிருந்து 75%-ஆக எகிறியுள்ளது.

அமெரிக்க ஐ.டி. நிறுவனங்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றன. இதனால் ஏ.ஐ. துறையில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பணியாளர்களை மட்டுமே பணியமர்த்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. புதிதாகப் பணியில் சேரும் இளம் பொறியாளர்களுக்குக் கடும் போட்டி நிலவினாலும், உயர்திறன் கொண்டவர்களுக்கு அமெரிக்கக் கதவுகள் அகலத் திறந்துள்ளன.
கட்டண உயர்வு தொடர்பான வழக்குகள் இன்னும் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போதைய தேர்வு விகித உயர்வு தகுதியுள்ள இந்தியப் பணியாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
