படப்பிடிப்பில் விபத்து.. முதுகில் காயம்! நடிகர் சங்க பொதுக்குழுவில் பங்கேற்காத விஷால்!
நடிகர் விஷால் நடித்துவரும் ‘புருஷன்’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. அப்போது பரபரப்பான சண்டைக்காட்சியை படமாக்கியபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் முதுகில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு முழுமையாக குணமடைய 3 வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக விஷால் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக செப்.27 அன்று நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நேரில் பங்கேற்க முடியவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமளிப்பதாகவும், தனது சூழ்நிலையை உறுப்பினர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் குணமடைந்து மீண்டும் வழக்கமான பணிகளுக்குத் திரும்ப ஆவலுடன் இருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் விஷால் கூறியுள்ளார்.‘புருஷன்’ படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.விஷால் வராத நிலையில், செப்.27 நடைபெற்ற நடிகர் சங்கத்தின் 70-வது பொதுக்குழு கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
