விஷு.. சித்திரைக் கனி காணுதல் பலன்களும், சிறப்பம்சமும் - எப்படி வழிபட்டால் செல்வம் சேரும்?!

 
சித்திரை கனி காணுதல் சித்திரை கனி காணுதல்

இன்று சித்திரை மாதப்பிறப்பு. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்றைய தினத்தை தமிழ் புத்தாண்டாக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சூரியனை அடிப்படையாக கொண்டது தமிழர்களின் பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், வழிபாடும். அதனால் தான் சூரியனையும் கடவுளாக பாவித்து வழிபட்டு வந்தார்கள். 

தை மாதத்தில் எப்படி சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுகிறோமோ அப்படியே சித்திரையிலும் வழிபடுவார்கள். இன்று முதல் உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைகிறது. இன்று சித்திரை கனி காணுதல் சிறப்பான நிகழ்வு நடைபெறும். மா, பலா, வாழை என்கின்ற முக்கனிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.

சித்திரை கனி காணுதல்

முதல் நாள் இரவே பூஜை அறையில் மாக்கோலமிட்டு பின் ஒரு பெரிய தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் எடுத்து வைக்கப்படுவது வழக்கம்.  

தேங்காய் வெற்றிலை, பாக்கு, வாசனை மலர்கள் கொண்டும், கொன்றை மலர்களாலும்  அலங்கரிக்கலாம். அத்துடன் பணம் மற்றும் காசுகள், முகம் பார்க்கும் கண்ணாடி, உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை எடுத்து  வைப்பர்.

சித்திரை கனி காணுதல்

இன்று அதிகாலையில் எழுந்தவுடன் முதலில் சென்று பூஜை அறையில்  மங்கலப்பொருட்களில் கண் விழிக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் நிறையும். வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறையும் என்பது ஐதிகம். இதுவே சித்திரை கனி  காணுதல். மனதை ஒருமுகப்படுத்தி, வேண்டுதல் செய்ய நிச்சயம் பலன் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த வருடத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.