"விஸ்வகுருவால் ஒரு தேர்வைக்கூட நடத்த முடியவில்லை.. கல்வி முறையையே சீரழித்து விட்டார் மோடி" - ராகுல் காந்தி ஆவேசம்!

 
ராகுல் காந்தி ராகுல் காந்தி

தேசிய தேர்வு முகமை நடத்தும் மத்தியப் பல்கலைக்கழக இளநிலை நுழைவுத் தேர்வில் இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் காலதாமதத்தை முன்வைத்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  இந்தியாவின் ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் பிரதமர் மோடி முழுமையாகச் சீரழித்துவிட்டார் என்று அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று  நாடு முழுவதும் கணினி வழியில் தொடங்கவிருந்த சிசியுஇடி நுழைவுத் தேர்வு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பல்வேறு மையங்களில் பல மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  "முதலில் வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட்  தேர்வு, பின்னர் சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகள், ஊழியர் தேர்வாணையத்தின் எஸ்எஸ்சி தேர்வுகள் தற்போது இன்றைய சிசியுஇடி தேர்வு எனத் தேசிய அளவிலான முக்கியத் தேர்வுகள் அனைத்தும் வரிசையாகப் பெரும் குளறுபடிகளைச் சந்தித்து வருகின்றன.

மோடி சோகம் மெளனம்

இந்த 4 முக்கியத் தேர்வுகளின் குளறுபடிகளால் மட்டும் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள சுமார் 1 கோடிக்கும் அதிகமான மாணவச் செல்வங்கள் தங்களது எதிர்காலம் என்னவாகுமோ என்ற கடுமையான மன உளைச்சலுக்கும், பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர். இதில் ஒரு தேர்வைக்கூட இந்த அரசால் நேர்மையான முறையில் நடத்தி முடிக்க முடியவில்லை."

"உலகிற்கே வழிகாட்டும் 'விஸ்வகுரு' என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மோடி அரசால், சொந்த நாட்டில் உள்ள மாணவர்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வைக்கூடச் சரியாக, தடையின்றி நடத்தத் துப்பில்லை. பிரதமர் மோடி இந்தியாவின் ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் முற்றிலும் தரைமட்டமாக்கி, சீரழித்துவிட்டார். எந்த இளைய தலைமுறையின் எதிர்காலத்தை தங்களது நிர்வாகத் திறமையின்மையால் நீங்கள் பாழாக்கிக் கொண்டிருக்கிறீர்களோ, அதே இளைய தலைமுறை மிக விரைவில் உங்களிடம் இதற்கான கணக்கைக் கேட்கும்; உங்களைப் பொறுப்பேற்கச் செய்யும்."

பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்ட பல்வேறு தென்னக மற்றும் வடமாநில எதிர்க்கட்சித் தலைவர்களும், நாட்டின் உயரிய கல்வித் தேர்வு முகமைகளின் கட்டமைப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசை நோக்கிக் கடுமையான கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.