42 ஆண்டு சாதனை முறியடிப்பு! ஆசிய விளையாட்டில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் 54.75 விநாடிகளில் அசத்தல்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றதுடன், நீண்ட காலமாக நீடித்து வந்த பி.டி.உஷாவின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

இந்திய தடகளத்தின் முன்னாள் நட்சத்திர வீராங்கனை பி.டி.உஷா 1984-ம் ஆண்டு 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் ஓடி தேசிய சாதனை படைத்திருந்தார். அந்த சாதனை சுமார் 42 ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்திய தடகள கூட்டமைப்பின் பதிவிலும் 55.42 விநாடிகள் பி.டி.உஷாவின் சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வித்யா ராம்ராஜ் ஏற்கனவே 2023-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டில் 55.42 விநாடிகளில் ஓடி பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது 54.75 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து அந்த சாதனையை கடந்துள்ளார்.
2026 ஆசிய விளையாட்டில் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப்போட்டிக்கு வித்யா ராம்ராஜ் மற்றும் மற்றொரு இந்திய வீராங்கனை அனு ராகவன் முன்னேறியிருந்தனர். தகுதிச் சுற்றில் வித்யா 55.73 விநாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார்.தற்போது 54.75 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், பி.டி.உஷாவின் நீண்டகால சாதனையை முறியடித்திருப்பது தமிழகத்திற்கும் இந்திய தடகளத்திற்கும் முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.
