கே.என்.நேரு வீட்டின் முன் குவியும் தொண்டர்கள்... அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு - திருச்சியில் பரபரப்பு!
திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற 2,538 பொறியாளர் பணியிட நியமனங்களில் சுமார் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லம் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள கே.என்.நேருவின் இல்லம் மற்றும் சென்னையில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு, அலுவலகங்கள் எனப் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடுக்கப்பட்டுள்ளது. 3 வாகனங்களில் வந்த சுமார் 15 அதிகாரிகள் அடங்கிய தனிப்படை, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள முக்கியமான கோப்புகள், வங்கி ஆவணங்கள் மற்றும் கணக்கு விவரங்களைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சோதனை செய்தி காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து, திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீட்டின் முன்பாக திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர்.
தொண்டர்கள் குவிந்து வருவதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

ஏற்கனவே கே.என்.நேரு தரப்பில் முன்ஜாமீன் அல்லது இடைக்காலத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தால் தங்கள் தரப்பைக் கேட்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை 'கேவியட்' மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த அதிரடிச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
