அதிர்ச்சியில் தொண்டர்கள்... விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரச்சாரமும் ரத்து... குமரி, கவரப்பேட்டை பயணங்களும் ‘கட்’!

 
தவெக விஜய் தவெக விஜய்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றித் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரப் பயணத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது அக்கட்சியினரிடையே பெரும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) விஜய் பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகத் தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதியும் பெறப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாகக் கும்மிடிப்பூண்டி பிரசாரப் பயணம் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக விஜய்

கும்மிடிப்பூண்டி மட்டுமல்லாது, விஜய்யின் மற்ற முக்கியப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை நடைபெறவிருந்த குமரி மாவட்ட பிரசாரம் ரத்து. நாளை மறுநாள் கும்மிடிப்பூண்டியைத் தொடர்ந்து நடைபெறவிருந்த கவரப்பேட்டை பிரசாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் தி.நகர், வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் விஜய்யின் பிரசாரங்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்படவில்லை என்றும், காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் கூறித் தவெக தரப்பில் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டன.

விஜய்

தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் நேரடிப் பிரசாரத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கும்மிடிப்பூண்டி மற்றும் குமரி மாவட்டத் தொண்டர்கள் இந்த அறிவிப்பால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நேரக் குறைபாடு காரணமாக இந்தப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதா அல்லது கட்சியின் தேர்தல் வியூகத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்துத் தவெக தலைமை விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.