பனையூரில் கி.மீ தூரத்திற்கு வரிசையில் தொண்டர்கள்.. தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி, எம்எல்ஏ கெகநாத் மிஸ்ரா!
தமிழக வெற்றிக் கழகம்நோக்கி மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் மற்றும் தொண்டர்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதலே மாற்றுக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தங்களை இணைத்துக் கொள்ளக் குவிந்து வருகின்றனர்.
இன்று பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த இணைப்பு நிகழ்வில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோமதி தவெகவில் இணைந்து பணியாற்றத் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்துள்ளார். கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.
அதேபோல், தனது 'நமது மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை முழுமையாகத் தவெகவுடன் இணைப்பதற்காக அதன் நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கெகநாத் மிஸ்ராவும் பனையூர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்துள்ளார். மூத்த அரசியல் தலைவர்களின் இந்த அடுத்தடுத்த வருகை தவெக நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்கள் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த மாற்றுக்கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் தவெகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்வதற்காகப் பனையூர் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்று, கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகளைத் தவெக தலைமை நிலைய நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை நோக்கித் தவெக எடுத்து வைக்கும் இந்த ஒவ்வொரு அடியும் மற்ற அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
