BREAKING... தனியார் ஜவ்வரிசி ஆலையில் ரசாயன வாயுக்கசிவு... 14 பேருக்கு வாந்தி, மயக்கம்!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய வீட்டின் அருகிலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான ஜவ்வரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மரவள்ளிக் கிழங்குகளை அரவை செய்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

இத்தகைய சூழலில், குடோனில் 18 பேர் வழக்கம்போல் தங்களது பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அறையில் வைக்கப்பட்டிருந்த குளோரின் மூட்டைகள் தீப்பிடித்து எரிந்தன. இந்தத் தீ விபத்தின் தொடர்ச்சியாகக் குளோரின் பவுடர் பகுதியிலிருந்து பெருமளவில் புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக அதனைத் தணிப்பதற்காகத் தண்ணீரை ஊற்றியுள்ளனர்.

இதன் காரணமாக ஆலை வளாகத்தில் ஏற்பட்ட ரசாயன வாயுக்கசிவால் 14 பேர் பரிதாபமாக மயக்கமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய விபத்து நிகழ்ந்ததற்கான உண்மையான காரணங்கள் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
