தொழிற்சாலையில் பிரியாணி சாப்பிட்ட 100 ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்... பரபரப்பு!
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்தபோது, மதிய உணவாக ஊழியர்கள் அனைவருக்கும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பிரியாணியைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கின. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், தொழிற்சாலை வளாகத்திற்குள் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்துப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஊழியர்கள் சாப்பிட்ட பிரியாணியில் ஏதேனும் நச்சுத்தன்மை இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
