வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது ... உச்சநீதிமன்றம் மறுப்பு!

 
தேர்தல் தேர்தல்

இந்தியாவில் தேர்தல்களின் போது அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வாக்களிக்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் மற்றும் அரசு நலத்திட்டங்களைப் பெறத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இத்தகைய கோரிக்கையை ஏற்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது என்பது ஒருவரின் விருப்பம் சார்ந்த விஷயம் என்றும், இதில் யாரையும் வற்புறுத்த முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் நீதித்துறை இதில் தலையிட முடியாது என அவர்கள் விளக்கம் அளித்தனர். கடந்த 75 ஆண்டுகளாக மக்களாட்சி மாண்புகளை இந்தியா போற்றி வருவதாகவும், கட்டாயப்படுத்துவதை விட விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறந்தது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

வாக்களிக்காதவர்களைக் குற்றவாளிகளாகக் கருத முடியாது என்றும், இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஒரு ஏழைத் தொழிலாளி தனது வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் செல்வதைத் தடுத்து வாக்களிக்கச் சொல்ல முடியாது என அவர்கள் உதாரணம் காட்டினர். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும் கூட இத்தகைய விதிவிலக்குகள் தேவைப்படும் என்பதால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.