தைலாபுரம் தோட்டத்தில் தபால் வாக்கு... ஜனநாயக கடமை ஆற்றிய ராமதாஸ் !
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று (ஏப்ரல் 17) தனது தபால் வாக்கைச் செலுத்தினார். தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கச் சிறப்பு வசதி செய்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்றனர்.
அதிகாரிகளின் முன்னிலையில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி அம்மாள் ஆகியோர் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் நடைமுறைகளின்படி ரகசியம் காக்கப்பட்டு, வாக்குகள் அடங்கிய பெட்டி பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக, மூத்த குடிமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தடையின்றி வாக்களிக்க வேண்டும் எனப் பாமக தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தபால் வாக்குப்பதிவு நடைமுறை, கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இந்த வசதியைப் பயன்படுத்தி முன்கூட்டியே வாக்களித்து வருகின்றனர்.
