இன்னும் வாக்குப்பதிவு தொடங்கல ... எந்திரம் பழுதானதால் வாக்காளர்கள் ஆவேசம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வரும் வேளையில், இங்கு மட்டும் மின்னணு இயந்திரம் (EVM) சொதப்பியதால் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

காலை 7 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வந்து காத்திருந்த நிலையில், மாதிரி வாக்குப்பதிவின் (Mock Poll) போதே இயந்திரத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் அதிகாரிகளால் வாக்குப்பதிவைத் தொடங்க முடியவில்லை. இது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் எந்திரத்தைச் சரிசெய்யும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

4,023 வேட்பாளர்கள் களம் காணும் இந்தத் தேர்தல் திருவிழாவில், தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற அதிகாலையிலேயே வந்த முதியவர்கள் மற்றும் பெண்கள் வெயிலில் காத்துக்கிடப்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நேரம் செல்லச் செல்ல கூட்டத்தின் அளவு அதிகரித்து வருவதால், அந்தப் பகுதியில் லேசான பதற்றம் நிலவுகிறது. எந்திரத்தைச் சரிசெய்யும் பணி இழுபறியாக இருப்பதால், மாற்று இயந்திரத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாளையங்கோட்டை மட்டுமின்றி, ஏற்கனவே ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தின் சில பகுதிகளிலும் இதேபோன்ற இயந்திரக் கோளாறுகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ரோஸ்மேரி பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரம் சரிசெய்யப்பட்ட பிறகே மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் என்பதால், அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
