இன்று வாக்குப்பதிவு.. சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் பயணம் - திணறிய பேருந்து முனையங்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 23 நடைபெறுவதை முன்னிட்டு, சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காகப் போக்குவரத்துத் துறை சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 10,663 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மட்டும் வழக்கமான பேருந்துகள் மற்றும் 1,339 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,431 பேருந்துகளில் 1,88,705 பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாம்பாக்கம் (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்), கோயம்பேடு மற்றும் மாதாவரம் ஆகிய முக்கிய முனையங்களில் நேற்று மாலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் 5,662 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் சொந்தக் கார் மற்றும் பைக்குகளிலும் குடும்பத்துடன் ஊருக்குக் கிளம்பியதால் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டாலும், போக்குவரத்து போலீசார் நிலைமையைச் சீர்செய்து பயணிகளுக்கு உதவினர்.

அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி ஆம்னி பேருந்துகளிலும் இடங்கள் முழுமையாக நிரம்பின. தேர்தலை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் காட்டிய இந்த ஆர்வம், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
