இன்று வாக்குப்பதிவு... தேர்தல் பணியில் 3.60 லட்சம் அரசு ஊழியர்கள்...4,023 வேட்பாளர்களில் ஜெயிக்கப் போவது யார் யாரு?!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஜெயிக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் திருவிழாவில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனத் தமிழக வரலாற்றில் முதல்முறையாகப் பலமான 4 முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 3,579 ஆண்கள், 443 பெண்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும், எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூரிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 40 லட்சம் போலி மற்றும் இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் 85-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்கள்: 2.80 கோடி, பெண்கள்: 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்: 7,728
தமிழகம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பெல் நிறுவனப் பொறியாளர்கள் நேற்று மாலைக்குள் அனைத்து எந்திரங்களையும் நிறுவிச் சோதனையிட்டனர். தேர்தல் பணியில் ஈடுபடும் 3.60 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

300 கம்பெனி துணை ராணுவத்தினர் மற்றும் 1.20 லட்சம் தமிழக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் ₹1,200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படும்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்கு முன்னதாக இன்று காலை 6 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஜனநாயகக் கடமையை ஆற்றத் தமிழகம் தயாராகிவிட்டது. இன்று காலை 7 மணிக்கே உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று மறக்காமல் வாக்களியுங்கள்!
